அநாசாரமான நிலை, ஆசாரமான அநுக்ரஹம்

ஸ்ரீசரணர்கள் காஞ்சி வியாஸ ச்ராந்தலயேச்வரர் ஆலயத்தில் தரிசனம் கொடுத்து வந்த காலம். ஒருநாள் உணர்ச்சிப் பெருக்கை உடலெல்லாம் தேக்கிய ஓர் ஆந்திர தம்பதி ஒரு பெண் குழந்தையுடன் வந்தார்கள். தம்பதியில் ஸதியாக இருந்த பெண்மணி புகழ்பெற்ற பத்திரிகையாளரான 'ஆந்திரப்ரபா' ஆசிரியரும், காந்திஜியிடம் 'நெருக்கம்' என்று சொல்லுமளவுக்குப் பழக்கம் கொண்டவருமான நீலம் ராஜு வேங்கடசேஷய்யாவின் மகளார். தேர்ந்த காந்தீயவாதியாக இருந்த நீலம் ராஜு பின்னாளில் பெரியவாளின் பரம பக்தரானார். அவர் குடும்பம்முழுதும் பெரியவாள் பக்தியில் முங்கித் திளைத்தது.

அன்று அந்த அம்மணியும் அவரது பதியும் திருச்சந்நிதியில் தங்கள் உணர்ச்சியை, அதற்குக் காரணமான நிகழ்ச்சியை உரையாக்கிக் கொட்டினர். அவர்கள் வசித்தது லண்டனில். அங்கிருந்து அவர்கள் வேறேதோ தேசத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பெரியதொரு கோளாறு ஏற்பட்டது. 'ஸேஃப் லாண்டிங்'குக்கு வாய்ப்பேயில்லை என்பது போன்ற ஆபத்து நிலை என்று விமான ஓட்டிகள் அறிவித்து விட்டனர். பிரயாணிகளின் மனநிலையைச் சொல்ல வேண்டுமா?

இத் தம்பதியின் மனம் பெரியவாளிடந்தான் ஓடி, அதைக் கெட்டியாகக் கட்டிப் பிடித்து ஆபத்து நிவாரணம் கோரியது. அவர்களுக்கு மஹானின் காப்பில் இருந்த நம்பிக்கையுறுதி காரணமாக, அஞ்சிக் கொண்டிருந்த மற்ற பயணிகளுக்கும் தங்களது இந்திய தேசத்திலுள்ள 'ஸேஜ் ஆஃப் காஞ்சி'யைத் தெய்வத்தின் அவதாரமாகவே வர்ணித்து, ஆபத்பாந்தவரான அவரை வேண்டினால் விபத்து ஓடிப் போய்விடும் என்று தைரியமூட்டினர்.

உயிராபத்து என்றால் உய்வுக்கு எதைத்தான் பிடித்துக் கொள்ள மாட்டார்கள்? விமானமே கா...சிமுனிவரைப் பிரார்த்திக்கும் தியான கூடமாகிவிட்டது!

சிறிதுபோதில் அதுவரை விமான இயக்குநர்களின்முயற்சிகளுக்கு வளைந்து கொடுக்காத கருவிகள் அதிசயமாக ஒத்துழைக்கலாயின! 'மிராகிள்' என்று அவர்கள் வியக்குமாறு விபத்து விலகி விமானம் சொஸ்தமாக நிலத்தில் இறங்கியது! சக பயணிகள் யாவரும் நமது தம்பதியரைச் சூழ்ந்து கொண்டு வாழ்த்தினர்.

தம்பதியர் பெரியவாளுக்குக் கடிதம் எழுதினாலோ, அல்லது அடுத்தமுறை அவரைக் காணும் போதோ தங்கள் எல்லாருடைய இதயபூர்வமான நன்றி நமஸ்காரங்களை அவருக்குத் தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். தம்பதியோ உடனே இந்தியாவுக்குப் பறந்துவிட வேண்டும் ; உயிர் காத்த மனித தெய்வத்துக்குப் பாத பூஜை செய்ய வேண்டும் ; அப்புறந்தான் உணவருந்த வேண்டுமென்று பிரதிக்ஞை செய்து கொண்டனர்.

அப்படித்தான் இப்போது ஸ்ரீ சரணரின் சரணார விந்தத்துக்குப் பாதபூஜை செய்யப் புஷ்பங்களும், ஸ்வர்ண புஷ்பங்களும் எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றனர்.

பெரியவாளின் ரக்ஷக சக்தியும் ரக்ஷிக்கப்பட்டவர்களின் உத்தம பக்தியும் உடனிருந்தோரை உருக்கி விட்டது.

பெரியவாள் மிராகிளில் தமக்குச் சம்பந்தமேயில்லாதது போல, ஆனால் மலர்ச்சியுடன் அவர்கள் கூறியதையெல்லாம் கேட்டுக் கொண்டார். பன்னீராகச் சிறிது நேரம் அவர்களிடம் பேசினார். பிறகு பாரிஷதர்களிடம் கூறித் தமது பாதுகைகளைத் தருவித்தார்.

தம்பதியின் பெண் குழந்தையை அருகழைத்தார். அதன் பெற்றோர் கொண்டு வந்திருந்த புஷ்பம், ஸ்வர்ண புஷ்பம் யாவற்றையும் அதன் புஷ்பக் கையாலேயே எடுத்து எடுத்துப் பாதுகைக்கு அர்ச்சனையாகப் போடச் சொன்னார். குழந்தை ஆசை ஆசையாகப் பாத பூஜை செய்தது. பெற்றோர் ஆனந்தத்துடன் அதைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

ஸ்ரீசரணர் அவர்களை நோக்கி, "நீங்கள் இருவரும் சேர்ந்து இந்தக் குழந்தை. இது பண்ணும் பூஜை நீங்களே செய்வதுதான் அதோடு உங்கள் கையால் பண்ணுவதைவிட இது குட்டிக் கையால் பண்ணும்போது நிறைய அர்ச்சனை, நிறைய நாழி நடக்கும்" என்றுமுகமெலாம் நகையாகத் தெலுங்கு மொழியில் கூறினார்.

அவர்களது ஆனந்தம் அப்போது ஆராத ஆனந்தமாயிற்று பூஜைமுடிந்தது. ஸ்ரீசரணர் அவர்களை அழைத்துச் சென்று வயிறார போஜனம் செய்விக்குமாறு பாரிஷதர் சிலரிடம் பணித்தார்.

அவர்கள் சென்றபின் உடனிருந்தோரிடம் சொல்வார் : "இந்தப் புண்ய பாரத தேசத்தில் பிறந்த ஒருவர் அந்நிய தேசம் போய் நம்முடைய ஆசாரங்களில்லாத ஜனங்களுடன் பழகி விட்டுத் திரும்பி வரும்போது அங்கே என்ன அநாசாரம் நடந்திருக்குமோ என்கிறதால் அவர்களை ரொம்பவும் சாஸ்த்ரோக்தமான கர்மாக்களில் அனுமதிப்பதில்லை.

அதனால் நீலம் ராஜுவுடைய பெண் - மாப்பிள்ளை பாத பூஜை செய்கிறதற்கில்லை. சாஸ்த்ரிகளை வைத்துக் கொண்டு 'ஆசார்யமுகேன' என்று அவரிடம் அவர்கள் புஷ்பம் முதலானதைக் கொடுத்து அவர் கையால் பூஜை பண்ணியிருக்கலாம்தான்! ஆனால் அவர்களுக்கிருந்த பக்தி தாபத்தில், நேரே தாங்கள் பூஜை பண்ணாமல் ஒருத்தர் கையில் கொடுத்துப் பண்ணுவது ரொம்பவும் மனஸுக்கு ஏற்காமலே இருக்கும்.

அதுவே தங்கள் குழந்தை தங்களுக்காகக் பண்ணுகிறது, அதோடு நான் சொல்லிப் பண்ணுகிறது என்கிறபோது தாங்களே பண்ணுவதை விடவும் அவர்களுக்கு ஸந்துஷ்டியாயிருக்கும். "கடல் கடந்த தோஷம் குழந்தைக்கும் தானே இருக்கிறது என்று தோன்றலாம். அப்படியில்லை. அது புண்ய பாரத தேசத்திலிருந்து வேறே ஆசாரமுள்ள வெளியிடத்துக்குப் போகவில்லை. இந்தக் குழந்தை பிறந்ததே இங்க்லாண்டில் தான். அங்கே பிறந்த குழந்தை இந்தப் புண்ய தேசத்துக்கு வந்திருக்கிறது. அதோடு குழந்தைப் பிராயம் என்கிறதாலும் ஒரு பரிசுத்தி. அதனால்தான் சாஸ்த்ரத்துக்கு வித்யாஸமாகவும் பண்ணவேண்டாம், நல்ல பக்தி மனஸுக்காரர்களின் தாபத்தை சமனம் செய்யாமலும் இருக்க வேண்டாம் என்று அந்தக் குழந்தையை விட்டுப் பாத பூஜை பண்ணச் சொன்னது."