இளநீர் தீர்த்தம்

ஸ்ரீ ஸதாசிவம் - எம்.எஸ்.தம்பதியர் ஸ்ரீசரணர் தர்சனத்திற்கு அடிக்கடி சென்று வந்தவர்கள். ஆயினும் அவர்களுடையமுதல் வெளிநாட்டுப் பயணம் முடிந்தபின் சில ஆண்டுகள் அவர்கள் தரிசனத்துக்குச் சென்றதெல்லாம் பெரியவாள் செய்யும் மாலைப் பூஜையை ஒட்டியே இருந்தது. 1966-ல் அவர் காளஹஸ்தியில் பல மாதங்கள் முகாமிட்டிருந்தபோதுதான் ஒருநாள் 'ஃபாரின்-ரிடர்ன்ட்' ஸதாசிவம் முதன்முறையாக காலைப் பூஜைக்கு இருக்கமுடிந்தது.

பூஜை முடிந்து பெரியவாள் அபிஷேக தீர்த்தம் விநியோகிப்பதற்காக வந்தமர்ந்தார்.

தீர்த்தம் பெற விரைந்தேன். ஸதாசிவம் அவர்களும் வந்து சேர்ந்து கொண்டார். அவருக்குமுதலிடம் விட்டுப்பின் நகர்ந்தேன். ஆனாலும் என் மனசுக்குள் குடைச்சல்!

எதையும் தர்மசாஸ்திரத்தின் அடியொற்றியே செய்யும் ஸ்ரீசரணர் கடல் கடந்து சென்று வந்தோருக்கு அபிஷேக தீர்த்தம் வழங்க மாட்டார். அது தெரியாமல் ஸதாசிவம் வந்துவிட்டார். அந்த ஸந்தர்ப்பத்தில் அதை அவரிடம் நான் தெரிவிப்பது நன்றாயிருக்குமா என்ற எண்ணம் ஒரு பக்கம். அவர் பெரியவாளிடம் போய் நின்று பெரியவாளின் வாயினாலேயே விஷயமறிந்து பெரும் ஏமாற்றத்தோடு திரும்பினால் அதுவுந்தானே கஷ்டமாயிருக்கும் என்ற எண்ணம் இன்னொரு பக்கம். இப்படி நான் குழம்பிக் கொண்டிருக்கும்போதே ஸதாசிவம் பெரியவாளிடம் கை நீட்டியாச்சு!

எனக்குக் கொஞ்சம் 'திக் திக்'!

பெரியவாள் மந்தஹாஸத்துடன் சற்று எம்பிக் கையை நீட்டி அங்கே இருந்த ஒரு பிரப்பம் தட்டிலிருந்து ஒரு தேங்காயை எடுத்தார். தாம் அமர்ந்திருந்த இடத்தின் கீழே தரையில் அதை அபாரச் செய்நேர்த்தியுடன் ஒரு தட்டுத் தட்டினார். தேங்காயோடு பிளந்தது.

இளநீரைக் களகள என்று ஸதாசிவத்தின் கை நிறைய வார்த்தார் ஸ்ரீ சரணர். அதோடு அவரிடம், "ஈச்வர ஸ்ருஷ்டி பாரு! 'தாளால் உண்ட நீரைத் தலையால்'னு, அதுவும் சாக்கடைத் தண்ணியைத் தாளால எடுத்துண்டு சக்கரைத் தண்ணியாக்கித் தலையால தரும்படியா என்ன ஸ்ருஷ்டி விசித்ரம் பாரு" என்றார்.

இயல்பாக நடக்கும் ஏதோ ஒன்று போலச் சில ஸெகண்டுகளில் எல்லாம் முடிந்தது. 'கிழத்துக்குத்தான் எத்தனை 'ப்ரஸென்ஸ் அப் மைன்ட்?' என வியந்தேன். 'இளநீரா வார்த்தார்? கருணாம்ருதமல்லவா வார்த்து விட்டார்?' ஸதாசிவத்துக்குப் பெருமையான பெருமை! வெளியில் வந்ததும், "ஸ்பெஷல் ப்ராஸாதம்-னா பெரியவா குடுத்துட்டா?" என்று சொல்லிச் சொல்லி ஸந்தோஷித்தார்.

கிழவனார் ஸாமர்த்தியந்தான் என்னே? அவரது ஆசார மரபையும் இம்மி கூட நலிவிக்க மாட்டார்! ஆழிதய அன்பையும் மறுக்க மாட்டார். இரண்டையும் எப்படியோ 'பாலன்ஸ்' பண்ணி விடுவார்! பூஜையின் அபிஷேக தீர்த்தம் கடல் கடந்து சென்று வந்தோருக்குத் தருவதற்கில்லை என்று ஆசார சாஸ்திரம் சொல்கிறதா? எள்முனை அதிலிருந்து விலக மாட்டார்!

தேங்காயின் தீர்த்தம் பற்றி அப்படி எந்த விதியுமில்லையே! அன்பையே அந்த ரூபத்தில் உருக்கிப் பெருக்கி அடியாருக்கு வழங்கி விடுவார்!